குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்புப் பிரார்த்தனை, திருப்பயணம், சிலுவைப் பாதை வழிபாடு ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் புனித வெள்ளியை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்து செல்லும் போது கூறிய 7 திருவசனங்களை மையமாக வைத்து பங்குத் தந்தைகள் அருளுரை வழங்கினர்.
நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் காலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருச்சிலுவை வழிபாடு நடைபெற்றது. பின்னர் திருச்சிலுவை, இறைமக்கள் முத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
குலசேகரம்: குலசேகரம் புனித அகுஸ்தீனார் ஆலயத்தில் காலையில் மரண பாடுகளை உணர்த்தும் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலய அருள்பணியாளர் சிலுவை எட்வின் தலைமை வகித்தார். பின்னர் பிற்பகலில் திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், இறைமக்கள்
திருச்சிலுவைக்கு முத்தம் செய்தனர். தொடர்ந்து நற்கருணை வழங்கப்பட்டது.
நாகக்கோடு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சிக்கு ஆலய அருள்பணியாளர் மனோகியம் சேவியர் தலைமை வகித்தார். முளவிளை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்கு ஆலய அருள்பணியாளர் ஜோகீன்ஸ் தலைமை வகித்தார். சிலுவைப் பாதை ஊர்வலம் ஆலயத்திலிருந்து தொடங்கி வெட்டுக்குழி, ஆனையடி, வேர்க்கிளம்பி, பூவன்கோடு வழியாக நடைபெற்றது.
குலசேகரம் சிஎஸ்ஐ ஆலயத்தில் புனித வெள்ளி மும்மணி ஆராதனை போதகர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இது போன்று அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடைபெற்றது. ரட்சணிய சேனை ஆலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடைபெற்றது. இதில் திரளானோர்
பங்கேற்றனர். மலைவிளை பெந்தெகொஸ்தே சபையில், சபை நிர்வாகி சாது சி. செல்வராஜ் தலைமையில் புனித வெள்ளி ஆராதனை நடைபெற்றது.
குருசுமலை: புனித வெள்ளியையொட்டி குருசுமலையில் அதிகாலைமுதல் ஏராளமானோர் மலை அடிவாரத்திலிருந்து சிலுவைப் பாதை வழிபாடு செய்தவாறு மலை உச்சிக்கு சென்று திருச்சிலுவையை வழிபட்டனர். மாலையில் குருசு மலை இயக்குநர் வின்சென்ட் கே. பீட்டர் தலைமையில் இயேசுவின் திருப்பாடுகள் நினைவு ஆராதனை நடைபெற்றது.
கருங்கல்: கருங்கலில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயம் சார்பில் புனித கருணை மாதா மலை திருச்சிலுவை திருப்பயணம் நடைபெற்றது.
இவ் ஆலயம் சார்பில் தொடர்ந்து 34 ஆண்டுகளாக செல்லும் இந்த புனித கருணை மாதா மலை, கருங்கல் அருகே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 3 ஆயிரம் அடி உயரம் உள்ள இந்த மலையில் உள்ள தியான மையத்துக்கு பக்தர்கள் ஆண்டுதோறும் சிலுவை சுமந்து தியானித்து 14 நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்து இயேசுவின் பாடுகளை சித்தரித்து நடித்துக்காட்டி செல்வர்.
இவ்வாண்டு காலை 8 மணிக்கு பேரணி ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி கருங்கல் காவல் நிலையம், ராஜீவ் சந்திப்பு, காமராஜர் சந்திப்பு, பேருந்து நிலைய முன்புறம், நிர்மலா மருத்துவமனை வழியாக மலையின் உச்சியில் உள்ள தியானமையத்துக்கு சென்றடைந்தனர். தொடர்ந்து அங்கு கஞ்சிகாய்ச்சி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மதவேறுபாடின்றி திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருச்சிலுவை திருப்பயண குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.