குமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தது: மீண்டும் களை கட்டிய சுற்றுலாத் தலங்கள்

குமரி மாவட்டத்தில் தொடர் மழை தணிந்துள்ள நிலையில் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளன.
Published on
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் தொடர் மழை தணிந்துள்ள நிலையில் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில், வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக கடந்த 3 மாதங்களாக சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. திற்பரப்பு அருவி உள்ளிட்ட பிரதான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ள பெருக்கு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை தணிந்துள்ள நிலையில், சுற்றுலாத் தலங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன.

கிறிஸ்துமஸ் விடுமுறை: மீலாது நபி, கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை வந்துள்ள நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

மாவட்டத்தில், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளைப் பார்வையிட வெள்ளிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதில், மிதமாக தண்ணீர் கொட்டும் திற்பரப்பு அருவியில் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

சாலைகளை சீரமைக்க கோரிக்கை: மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்துச் சாலைகளும் சேதமடைந்து வாகனங்களை இயக்குவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் அனைத்துச் சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் கோரி வருகின்றனர்.

குமரியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

அதிகாலை முதலே பயணிகள் வருகை அதிகரித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்ல நீண்ட வரிசை காணப்பட்டது. திரிவேணி சங்கமம், காந்தி நினைவு மண்டபம், பேரூராட்சிப் பூங்கா, சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்டப் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வாகனங்களில் வந்ததால் சுசீந்திரம், கொட்டாரம், விவேகானந்தபுரம் உள்ளிட்டப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வரும் 10 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com