குழித்துறை வாவுபலி பொருள்காட்சி நாளை தொடக்கம்

குழித்துறையில் 93 ஆவது வாவுபலி பொருள்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 27) தொடங்கி ஆகஸ்ட் 15 வரை 20 நாள்கள் நடைபெறுகிறது.

குழித்துறையில் 93 ஆவது வாவுபலி பொருள்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 27) தொடங்கி ஆகஸ்ட் 15 வரை 20 நாள்கள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகிக்கிறார். குழித்துறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணபதி சங்கர் வரவேற்கிறார். மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பொருள்காட்சியை திறந்து வைக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இவ் விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன் (நாகர்கோவில்), ஆஸ்டின் (கன்னியாகுமரி), எஸ். ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். நகராட்சி பொறியாளர் ரமேஷ் நன்றி கூறுகிறார்.
குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி மாத அமாவாசையையொட்டி குழித்துறை ஆற்றங்கரையோரம் உள்ள வி.எல்.சி. மைதானத்தில் நடைபெறும் இப் பொருள்காட்சியில் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருள்களை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். மேலும் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவை தவிர ராட்சத ராட்டினம், மேஜிக் உள்பட பல்வேறு பக்க காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு இடம்பெறுகின்றன.
மேலும் ஆடிமாத அமாவாசை (ஆக. 11) தினத்தன்று குமரி மாவட்டம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தாமிரவருணி ஆற்றங்கரையில் பலி தர்ப்பணம் செய்து வருகிறார்கள். அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இப் பொருள்காட்சியையொட்டி இங்கு பல்வேறு வகை மரக்கன்றுகள், செடிகள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இப் பொருள்காட்சி தினமும் காலை 8 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com