மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் இதுவரை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 72 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிரமாக வாகனச் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவட்டாறு வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு புலியூர்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 296 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் திருவட்டாறு வட்டாட்சியர் சுப்பிரமணியன் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், குளச்சல் தொகுதியில் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 2,31, 500, பத்மநாபபுரம் தொகுதியில் ரூ. 22,59,940 என ஒரே நாளில் ரூ. 24 லட்சத்து 91 ஆயிரத்து 440 ரொக்கப் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏ.டி.எம். பணம்: தக்கலை அருகே பிலாங்காலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தாஜ்நிஷா மற்றும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வங்கி ஏடிஎம்களுக்கு ஆவணமின்றி ஜீப்பில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.21.54 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்தப் பணத்தை திருவட்டாறு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப். 2 ஆம் தேதி வரை நடைபெற்ற சோதனையில் ரூ. 2 கோடியே 16 லட்சத்து 65 ஆயிரத்து 351 ரொக்கமும், 623 கிராம் தங்கமும், 1 கிலோ 300 கிராம் வெள்ளியும், 11 மிக்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.