சின்னமுட்டம் துறைமுகத்தில் குவியும்  ஏற்றுமதி தரம்வாய்ந்த செந்நவரை மீன்கள்

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த சில நாள்களாக ஏற்றுமதி தரம்வாய்ந்த செந்நவரை மீன்கள்

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த சில நாள்களாக ஏற்றுமதி தரம்வாய்ந்த செந்நவரை மீன்கள் அதிகமாகக் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 275-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.  6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் தேவைக்குப்போக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  மீன்களை ஏற்றுமதி செய்வதற்காகவே 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
இங்கு அதிகமாக வெலமீன், பாறை, சாளை, சாவாளை, நெத்தலி, கிளாத்தி, நெடுவா, சீலா மற்றும் ஏற்றுமதி அதிகமுள்ள இறால், செந்நவரை, கனவாய் உள்ளிட்ட மீன்கள் அதிகமாக பிடித்து வரப்படுகின்றன.  பொதுவாக எல்லா நாள்களிலும் அனைத்து ரக மீன்களும் வலையில் கிடைக்கும் என்றாலும் சீசன் நேரங்களில் சிலவகை மீன்கள் அதிகமாக கிடைப்பது வழக்கம். 
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் செந்நவரை மீன்கள் அதிகமாக கிடைக்கின்றன.  இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இம்மீன்கள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 230 வரை விற்பனை செய்யப்படுகிறது.  இம்மீன் ஒன்று 150 கிராம் முதல் 250 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும்.  செந்நவரை மீன்களை ஏலத்தில் எடுப்பதற்காக கேரளத்தைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் துறைமுகத்தில் முகாமிட்டுள்ளனர்.
 இதுகுறித்து மீன் வியாபாரி லியோன் கூறியது:  நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை ஏலத்தில் எடுத்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.  
கடந்த இருமாதங்களாக கிளாத்தி மீன்கள் சீசன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது நவரை மீன்களின் சீசன் தொடங்கியுள்ளது. விசைப்படகுகளில் வழக்கத்தைவிட கூடுதலான செந்நவரை மீன்கள் பிடித்து வரப்படுவதால் என்னைப்போன்ற வியாபாரிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இத்துறைமுகத்தில் இருந்து பிடித்து வரப்படும் ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களை ஏலத்தில் எடுத்து பதப்படுத்தி சிங்கப்பூர், பர்மா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறோம் என்றார் அவர்.
இதுகுறித்து விசைப்படகு உரிமையாளரான சிலுவை கூறியது:  சின்னமுட்டத்தில் தற்போது நவரை மீன்கள் சீசன் தொடங்கியுள்ளது.  நாள்தோறும் டன் கணக்கில் இவ்வகை மீன்கள் கிடைப்பதால் எங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. 
 இம்மீன்கள் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதால் வெளிமாநில வியாபாரிகளும் துறைமுகத்தில் முகாமிட்டுள்ளனர்.  
இம்மீன்களைத் தவிர வெலமீன், சிலுக்கு, கிளி உள்ளிட்ட மீன்களும் அதிகமாக கிடைக்கின்றன என்றார் அவர்.
சின்னமுட்டம் துறைமுகத்தில் நவரை மீன்களின் வருகை அதிகரிப்பு காரணமாக மீன்பிடித் தொழில் களைகட்டியுள்ளது.  இதனால் மீனவர்களும்,  வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com