இந்து மதம் ஏராளமான அற்புதங்களை கொண்டது என்றார் கோவை காமாட்சிபுரி 51 சக்திபீடம் குருமகா சன்னிதானம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்கத் திருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்றைய தினம் இரவில் தூக்கத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் தலைவர் வி.சதாசிவன் நாயர் தலைமை வகித்தார். செயலர் வி. மோகன்குமார் வரவேற்றார். கோவை காமாட்சிபுரி சக்திபீடம் சுவாமிகள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசியது: நமது நாட்டில் ஏராளமான சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. கேரளத்தில் அன்னை சோற்றானிக்கரை பகவதி சுயம்புவாக காட்சி கொடுத்துக் கொண்டிருப்பதை போன்று இங்குள்ள பத்ரகாளி அம்மனும் சுயம்புவாக காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
வணங்குவோர்க்கு வறுமை நீக்கி, துதிப்போர்க்கு துன்பம் நீக்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கொடுத்து அன்னை பத்ரகாளி ஆசீர்வதிக்கின்ற அற்புதத்தை இங்கு நாம் காணுகின்றோம். இந்த பத்ரகாளி மனிதனை பத்திரமாக பாதுகாக்கும் பவித்திரமுடையவளாக காட்சியளிக்கிறார் என்றார் அவர்.
தொடர்ந்து கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் பேசினார். தேவஸ்தான பொருளாளர் சூரியதேவன் தம்பி நன்றி கூறினார்.