ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக ஊதியத்தை செலவிடுவேன்: ஹெச்.வசந்தகுமார்
By DIN | Published On : 01st April 2019 02:00 AM | Last Updated : 01st April 2019 02:00 AM | அ+அ அ- |

மக்களவைத் தொகுதி உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எனக்கு வழங்கப்படும் ஊதியத்தை குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக செலவிடுவேன் என்றார் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார்.
புதுக்கடையில் நடைபெற்ற கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: மாணவர், மாணவிகள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், இம்மாவட்டத்தில் இலவச பயிற்சி மையம் அமைப்பேன். மேலும், இம்மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக, எனக்கு வழங்கப்படும் ஊதியத்தை செலவிடுவேன் என்றார் அவர்.
கூட்டத்துக்கு, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட திமுக செயலர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் செல்லசுவாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தங்கமோகன், கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலர் ராஜன், முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், சாந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.