நாகர்கோவிலில் தொழிலாளியின் சடலம் மீட்பு
By DIN | Published On : 01st April 2019 01:52 AM | Last Updated : 01st April 2019 01:52 AM | அ+அ அ- |

நாகர்கோவிலில் வயல் வெளியில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவமணி (38). தொழிலாளி. இவர் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது மனைவி ஜோதி (28), கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஒழுகினசேரி அருகேயுள்ள வயல்வெளியில் ஆண் சடலம் கிடப்பதாக வடசேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தது சிவமணி என்பதும், அவரது உடலில் லேசான காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.