இளைஞர் கொலை வழக்கு: சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள்
By DIN | Published On : 12th April 2019 07:26 AM | Last Updated : 12th April 2019 07:26 AM | அ+அ அ- |

நாகர்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (38). அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). கடந்த 2010இல் நடைபெற்ற கோயில் கொடை விழாவில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்த தகராறில் செல்வகுமார், செல்வராஜை தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, செல்வகுமாருக்கும், செல்வராஜின் மகன்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி, தம்மத்துக்கோணம் பகுதி பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்வகுமார் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த செல்வராஜின் மகன்கள் மணிகண்டன் (31), அய்யப்பன் (32), பாபு (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் பலத்த காயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீஸார், சகோதரர்கள் மணிகண்டன், அய்யப்பன், பாபு மற்றும் அவர்களது மைத்துனர் சுபாஷ் என்ற கண்ணன் (36) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது சகோதரர்கள் மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி அப்துல்காதர், 3 பேருக்கும் கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் (தடுத்து நிறுத்தியது) 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், இதை கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து, உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சுபாஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக, நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.