மே 10இல் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர் குறைதீர் முகாம்
By DIN | Published On : 26th April 2019 01:10 AM | Last Updated : 26th April 2019 01:10 AM | அ+அ அ- |

வருங்கால வைப்புநிதி (பி.எப்) சந்தாதாரர்களுக்கான குறைதீர் முகாம் மே 10ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் ரௌஷன்காஸ்யப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வைப்புநிதி தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்யவும், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை எளிதாக்கும் வகையிலும், வைப்புநிதி உங்கள் அருகில் என்ற நிகழ்ச்சி மே 10ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை உறுப்பினர், தொழிலாளர்களுக்கும், பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை தொழில் நிறுவனங்களுக்கும், நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, வருங்கால வைப்புநிதியில் சேர தகுதியிருந்தும் சேர்க்கப்படாமல் இருப்பவர்களும், உலகளாவிய கணக்கு எண் இல்லாதவர்கள், செயலிழந்த கணக்கை முடிக்க விரும்புபவர்கள், மாதச் சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள், விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்காதவர்கள், ஓய்வூதியம் மற்றும் ஆண்டு சந்தா தொடர்பான குறைகள் நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் இருப்பவர்கள், மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பத்தை மே 6ஆம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.