மேம்பாலத்துக்கு எதிர்ப்பு: தக்கலையில் வணிகர்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 06th February 2019 12:33 AM | Last Updated : 06th February 2019 12:33 AM | அ+அ அ- |

தக்கலை மேம்பாலத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு, சங்கத்தின் தலைவர் அ.ரேவன்கில் தலைமை வகித்தார். பொதுச்செயலர் வை.விஜயகோபால், பொருளாளர் க.சங்கரமூர்த்தி, துணைத் தலைவர் கே. சண்முகம், செயலர் ப.மோசஸ் ஆனந்த், தணிக்கையாளர்கள் ப.நடராஜன், ஐ.ஜகபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
உண்ணாவிரதத்தை கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் அ.அல் அமீன் தொடங்கிவைத்தார். மாநில துணைத் தலைவர் அலெக்ஸாண்டர், மாநில இணைச் செயலர் விஜயன், மாநில துணைத் தலைவர் வி.ஜோசப்ராஜ், மாவட்டச் செயலர் ரவி, மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணன் குட்டி, மார்த்தாண்டம் சங்க துணைத் தலைவர் சுந்தர்ராஜ், செயலர் ராஜா செல்வின்ராஜ், அழகியமண்டபம் தலைவர் விஜி, தேங்காப்பட்டினம் வணிகர் சங்கம் நாகராஜன், கொல்லன்கோடு ஹரிகுமார், கோட்டப் பொறுப்பாளர்கள் இளங்கோ, வைகுண்டமணி, இளைஞர் அணி பொறுப்பாளர் நஜிமுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவர் பி.டி.பி. சின்னத்துரை முடித்து வைத்தார்.
இந்தப் போராட்டத்தையொட்டி, பேருந்து நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து வணிகர்கள் கூறியதாவது: தக்கலையில் மேம்பாலம் அமைத்தால் வியாபாரம் முடங்கும். வணிகர்கள் குடும்பங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும். தற்போது நடைபெறும் நான்குவழிச் சாலை பணி நிறைவுற்றால் தக்கலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இருவழிப் பாதை ஏற்படுத்தினாலே போதுமானது. இதற்கு மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...