நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண் சாவு: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
By DIN | Published On : 12th February 2019 12:31 AM | Last Updated : 12th February 2019 12:31 AM | அ+அ அ- |

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகேயுள்ள மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். எல்லை பாதுகாப்புப் படை வீரர். இவரது மனைவி ஆஷா (29). இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி 2 ஆவது பிரசவத்துக்காக, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஷா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3 ஆம் தேதி சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, 6 ஆம் தேதி ஆஷாவுக்கு குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஆஷாவுக்கு நோய்த்தொற்று இருப்பதை கண்டறிந்து, மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆஷா, ஞாயிற்றுக்கிழமை (பிப். 10) திடீரென உயிரிழந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஆஷாவின் பெற்றோர், மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியத்தால் ஆஷா இறந்ததாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இதுகுறித்து ஆஷாவின் தந்தை தங்கப்பன் மற்றும் உறவினர்கள், மாதர் சங்க மாநில நிர்வாகி ஆர். லீமாறோஸ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அதில், தனது மகள் ஆஷா மருத்துவர்களின் தவறான சிகிச்சை, கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனால், இந்த மருத்துவமனை மருத்துவர்கள் உடல்கூறாய்வு செய்தால், ஆஷாவின் மரணத்திற்கான காரணம் மறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, வேறு மாவட்ட மருத்துவக் குழுவை கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடத்தி, உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் ஆஷாவின் தந்தை அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, திங்கள்கிழமை மாலை வரை, ஆஷாவின் சடலத்தை பரிசோதனை செய்ய அனுமதிக்க மறுத்து, அவரது உறவினர்கள் 2 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.