பேருந்து பயணிகளிடம் நகை, பணம் திருட்டு: ரூ. 2.25 லட்சத்தை பறிகொடுத்த காவலரின் மனைவி
By DIN | Published On : 12th February 2019 06:53 AM | Last Updated : 12th February 2019 06:53 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் ரூ. 2.25 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி குன்னுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். நெல்லையில் ஆயுதப்படை காவலராக உள்ள இவர், அங்குள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுஜிஷாலினி (33). இவர், இரணியல் அருகே திங்கள்நகரில் உறவினரிடம் கொடுத்த ரூ. 2.25 லட்சத்தை திங்கள்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டு, நாகர்கோவிலுக்கு வரும் அரசுப் பேருந்தில் ஏறினார். பேருந்து சுங்கான்கடைக்கு அருகே வந்தபோது, சுஜிஷாலினி கொண்டுவந்த பணத்தை காணவில்லையாம்.
மற்றொரு பயணியிடம் திருட்டு: மூலச்சலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சீலாள் (43). சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளரான இவர், திங்கள்கிழமை திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் வந்தார். அப்போது, அவர் வைத்திருந்த 76,500 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இந்த இருச்சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நகை திருட்டு: தக்கலையை அடுத்த வில்லுக்குறியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை மனைவி ராதா (63). இவர் திங்கள்கிழமை காலை வில்லுக்குறியில் இருந்து தக்கலைக்கு பேருந்தில் சென்றார். தக்கலை பேருந்து நிலையத்தில் ராதா இறங்கியபோது, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் ராதா அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.