களியக்காவிளை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி தீவிரம்
By DIN | Published On : 04th January 2019 12:35 AM | Last Updated : 04th January 2019 12:35 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் ஜன.1 முதல், 14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், களியக்காவிளையில் அத்திட்டத்தை அமல்படுத்தும் வகையில், பேரூராட்சி ஊழியர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் தை. சத்தியதாஸ் தலைமையில் இளநிலை உதவியாளர் சுதர்சிங், பேரூராட்சி ஊழியர்கள் சஜிகுமார், ராஜேந்திரன், எபனேசர், விஜுகுமார், சுகாதாரப் பணியாளர்கள் பரமசிவன், முருகன், புலமாடன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை சந்திப்பு, பி.பி.எம். சந்திப்பு மற்றும் அதையொட்டிய பகுதிகளிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், களியக்காவிளை, படந்தாலுமூடு சந்தைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒரு கடையிலிருந்து பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்டிரா) பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தெர்மாக்கோல் போன்ற பொருளால் செய்யப்பட்ட பைகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. அவை அரசால் தடை செய்யப்பட்டவை என்றும், அவற்றை பயன்படுத்தக் கூடாது; இரு நாள்களுக்குள் அப்புறப்படுத்திவிட வேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்பொருள்கள் பயன்படுத்தப்படுவது கண்டறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.