சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published On : 04th January 2019 12:34 AM | Last Updated : 04th January 2019 12:34 AM | அ+அ அ- |

சுசீந்திரம் பேரூராட்சிப் பகுதிக்கான குடிநீரை, குலசேகரபுரம் கிராம ஊராட்சி பகுதிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
சுசீந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட வழுக்கம்பாறையில் உள்ள குடிநீர்த் தொட்டியிலிருந்து, சிதம்பரபுரம், வழுக்கம்பாறை, சகாயபுரம், கரையான்குழி, மணவிளை ஆகிய 5 கிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது.
இந்த கிராமங்களுக்கு 3 நாள்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழுக்கம்பாறை குடிநீர்த் தொட்டியிலிருந்து குலசேகரபுரம் ஊராட்சிப் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக, புதன்கிழமை இரவு உரிய அனுமதியில்லாமல் சிலர் குழாயை பதிக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை வழுக்கம்பாறை குடிநீர்த் தொட்டி மூலம் பயனடையும், சுசீந்திரம் பேரூராட்சிப் பகுதி 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுசீந்திரம் ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை மறித்து போராட்டம் செய்ய முயன்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் போலீஸார், பொதுமக்களுடன் பேச்சு நடத்தி குலசேகரபுரம் ஊராட்சிப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படாது என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.