பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 21ஆயிரம் அபராதம் வசூல்
By DIN | Published On : 04th January 2019 12:34 AM | Last Updated : 04th January 2019 12:34 AM | அ+அ அ- |

நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்தவர்களிடம் ரூ.21 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜன. 1முதல் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள், தற்போது எங்கேனும் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள வணிக நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு வட்டாட்சியர் தலைமையிலும், நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி பொறியாளர் தலைமையிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் புதன்கிழமை நடத்திய ஆய்வில் நாகர்கோவில், குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் நகராட்சிகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் 119 கிலோவும், அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் நடத்திய ஆய்வில் 71 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, நாகர்கோவில் நகராட்சி பகுதியில் ரூ.18 ஆயிரம், பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் ரூ. 3 ஆயிரம் என மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.