கோட்டாறு ஆயுர்வேத மருத்துவமனையில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th June 2019 06:43 AM | Last Updated : 14th June 2019 06:43 AM | அ+அ அ- |

நாகர்கோவில் கோட்டாறில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என ஹெச். வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து அளித்துள்ள மனு: நாகர்கோவில் கோட்டாறில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கல்லூரியில் மாணவர், மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நான் அந்த மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபோது, அங்கு குடிநீருக்கு நோயாளிகளும், மாணவர், மாணவிகளும் அவதிப்படுவது தெரிய வந்தது. இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளதால் குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
எனவே, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, அங்கு நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.