குமரி மாவட்டத்தில் 6ஆவது நாளாக மழை நீடிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6ஆவது நாளாக வியாழக்கிழமையும் மழை நீடித்தது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6ஆவது நாளாக வியாழக்கிழமையும் மழை நீடித்தது. 
அரபிக்கடலில் உருவான வாயு புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 
இதனால் நாகர்கோவில், இரணியல், தக்கலை, திருவட்டாறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 10.40 அடியாக இருந்தது. அணைக்கு 767 கனஅடி நீர்வரத்து இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 35.05 அடியாக இருந்தது. அணைக்கு 347 கனஅடி நீர்வரத்து இருந்தது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 7.21 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 7.31 அடியாகவும் இருந்தது.
மழை காரணமாக நாகர்கோவில் நகரில் பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்த நிலையில், புதிதாக சாலைகள் அமைக்கப்படாததால் அவ்வை சண்முகம் சாலையில் கட்டபொம்மன் சந்திப்பு பகுதியில் உள்ள சாலை, சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் சாலை சீரமைப்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்ததையடுத்து, நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் தென்னை மரம் முறிந்து விழுந்தது. பார்வதிபுரம், தக்கலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாள்களில் 6 வீடுகள் இடிந்துள்ளன. 4 மின்கம்பங்கள் சேதமடைந்தன. 4 மரங்கள் வேரோடு சாய்ந்தன. தக்கலை பகுதியில் ஏராளமான வாழைகள் சாய்ந்தன. முளகுமூடு ஊமையன் குளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது.
மழை காரணமாக வைக்கோல் ஏற்றிச் செல்லும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): பேச்சிப்பாறை அணை 14.4, பெருஞ்சாணி அணை 4, சிற்றாறு 1 அணை 9.2, சிற்றாறு 2 அணை 8, மாம்பழத்துறையாறு அணை 7, நாகர்கோவில் 3.2, பூதப்பாண்டி5.2, தக்கலை 6.4, குழித்துறை 11, களியல் 12.4, புத்தன் அணை 3.2, திற்பரப்பு 9, சுருளோடு 10, கன்னிமார் 9.4, பாலமோர்  7.2, மயிலாடி 4.8, கொட்டாரம் 11, கோழிப்போர் விளை12, இரணியல் 7, அடையாமடை 11, குளச்சல் 16.4, குருந்தன்கோடு 7.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com