குமரியை தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக மாற்றுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 28th March 2019 06:56 AM | Last Updated : 28th March 2019 06:56 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக மாற்றிக்காட்டுவேன் என பாஜக வேட்பாளருமான மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தனது பிரசாரத்தை சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின்னர் தொடங்கினார். அவர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், கடைவீதியில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று அங்கிருந்த வணிகர்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரினார்.
அப்போது அவர் பேசும்போது, மாவட்ட வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்று செயல்படும் எனக்கு நீங்கள் ஆதரவு அளித்தால், மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி குமரி மாவட்டத்தை தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக மாற்றிக்காட்டுவேன். என்னை வெற்றி பெறச்செய்தால் உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன் என்றார் அவர்.
பிரசாரத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசும்போது, குமரி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி பொன்.ராதாகிருஷ்ணன் சாதனை படைத்துள்ளார். ரூ. 40 ஆயிரம் கோடியில் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். சுசீந்திரத்தில் புதிய பாலம் கொண்டுவந்த பெருமை அவரையே சேரும். மேலும், திட்டங்கள் கொண்டு வருவேன் என்று வாக்குறுதியும் அளிக்கிறார். எனவே மக்களாகிய நீங்கள் சிந்தித்து தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஏ.அசோகன், தோவாளை ஒன்றிய அதிமுக செயலர் கிருஷ்ணகுமார், பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் முத்துராமன், தேமுதிக மாவட்டச் செயலர் ஜெகநாதன், பாமக மாநிலத் துணைத்தலைவர் கில்மன்புரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...