ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு
By DIN | Published On : 30th March 2019 06:18 AM | Last Updated : 30th March 2019 06:18 AM | அ+அ அ- |

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமாயின.
செண்பகராமன் புதூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மேற்பார்வையாளராக செந்தில்வேல் (38) உள்ளார். வழக்கம் போல், கடையை வியாழக்கிழமை இரவு ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர். தேர்தல் நேரம் என்பதால் விற்பனையான பணம் ரூ.2.96 லட்சத்தை கடையினுள்ளே வைத்து சென்றனராம். வெள்ளிக்கிழமை அதிகாலை டாஸ்மாக் கடை தீப்பிடித்து எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள், கடை மேற்பார்வையாளருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், சி.சி.டி.வி.,யும் எரிந்து சேதமாகின.
விற்பனை பணம் ரூ.2.96 லட்சம் வைக்கப்பட்டு இருந்த இரும்பு பெட்டிக்கு எந்தவித சேதமும் ஆகவில்லையாம். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...