மார்த்தாண்டத்தில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட 15 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 06:19 AM | Last Updated : 30th March 2019 06:19 AM | அ+அ அ- |

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட 15 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் பல்வேறு வாகனங்கள் இயங்கி வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனடிப்படையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் கே. பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி மற்றும் அலுவலர்கள் களியக்காவிளை, மார்த்தாண்டம், புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், களியக்காவிளையில் உரிய வரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும் இயக்கப்பட்ட 2 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு தலா ரூ. 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று அதிக பாரம் ஏற்றிச் சென்ற 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உரிய தகுதிச் சான்று பெறாமல் இயக்கப்பட்ட 3 லாரிகள், அரசுப் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 2 கேரள பதிவெண் கொண்ட வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...