ஆளூர் பேரூராட்சியில் சுங்கான்கடை சுந்தரநயினார்குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறை, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என குளச்சல் பேரவை உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுங்கான்கடை சுந்தரனார் நயினார்குளத்தில் இருந்து ஆக்கிமிப்புகளை அகற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப் படுத்தினர். எனினும் குளத்தில் மணல்மேடுகள் அகற்றப்படவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பொதுக்கிணறு ஒன்றும் தனியார் வசம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் குளச்சல் பேரவை உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், சுந்தரநயினார்குளத்தை சனிக்கிழமை பார்வையிட்டார்.
ஜூன் மாதத்தில் பருவ மழை தொடங்கினால் இக்குளத்தில் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், பேச்சிப்பாறை அனந்தனார் கால்வாயிலிருந்து குளத்துக்கு தண்ணீர் வரத்து பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, நீர்வரத்து பாதையை சீரமைக்க வேண்டும். தனியார் வசமுள்ள பொதுக்கிணற்றை மீட்க வேண்டும். குளத்தில் இருந்து முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், குளத்தை சுற்றிலும் சுவர் மற்றும் படித்துறைகள் கட்ட வேண்டும். கிணற்றில் ஆழ்துளை கிணறு அமைத்தால் சுங்கான்கடை பகுதிக்கு குடிநீர் வழங்கலாம்.
சுங்கான்கடை பகுதிகளில் கல்லூரிகள் அமைந்துள்ள இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க முடியாத சூழல் காணப்படுகிறது.
ஆகவே, மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து காவலர்கள், அரசு போக்குவரத்து அலுவலர்கள் அங்கு பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவை உறுப்பினரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அப்போது, பேரவை உறுப்பினர் கூறியது: பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுற்றுச் சுவர், படித்துறைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
பேரவை உறுப்பினருடன், என்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கர்ணன், விவசாய சங்கத் தலைவர் விஜி, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.