வறண்டது முக்கடல் அணை: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

முக்கடல் அணையின் நீர்இருப்பு 1.35 அடியாக சரிந்ததை அடுத்து நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 
Published on
Updated on
1 min read


முக்கடல் அணையின் நீர்இருப்பு 1.35 அடியாக சரிந்ததை அடுத்து நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 
கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை அருகே முக்கடல் அணை உள்ளது.  இந்த அணை நீரை கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், நாகர்கோவில் நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நாகர்கோவில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள இந்த அணையின் கொள்ளளவு 25 அடி. அணையின் நீர்இருப்பு சனிக்கிழமை காலை நிலவரப்படி 1.35 அடியாக  உள்ளது.  2018 இல் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 12.05 அடியாக இருந்தது. 
நிகழாண்டு கோடை மழை பெய்யாததால் அணை வறண்டு காணப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்இருப்பு வெகுவாக சரிந்து வறண்டதை அடுத்து தற்போது நாகர்கோவில் நகர மக்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் அணையின் தற்போதைய நீர் இருப்பை கொண்டு அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.  
முக்கடல் அணை தூர் வாரப்படாததால் அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாத சூழல் எழுந்துள்ளது. அணை மண் மேடாக காட்சியளிப்பதால் அணையின் கொள்ளளவு குறைந்து வருகிறது. 
கோடை மழை கை கொடுத்தால் மட்டுமே நாகர்கோவில் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இதேநிலை நீடித்தால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாடை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, பூதப்பாண்டியைச் சேர்ந்த பூதலிங்கம் கூறியது: 
முக்கடல் அணையில் தூர் வாரும் பணி மேற்கொண்டு பல ஆண்டுகளாகின்றன. அணையில் நீரை சேமித்து குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
அணைக்கு நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. 
ஆக்கிரமிப்பினை அகற்றுவதுடன் தூர் வாரும் பணி மேற்கொண்டால் மட்டுமே நீரை சேமித்து வைக்க முடியும். மழை காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்தபோதிலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com