கத்தரி வெயில் தொடக்கம்: குமரியில் மிதமான வெப்பம்
By DIN | Published On : 05th May 2019 01:18 AM | Last Updated : 05th May 2019 01:18 AM | அ+அ அ- |

தமிழகத்தில் சனிக்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் மிதமான வெப்பம் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மலைப் பகுதிகள் உள்பட, அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. தாமிரவருணி ஆறு வறண்டு, கடற்கரையோர கிராமங்களில் கடல்நீர் உள்புகுந்ததால், பெருஞ்சாணி அணையிலிருந்து தாமிரவருணியாற்றில் தண்ணீர் திறக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த வாரம் வரை சுமார் 10 நாள்கள் மிதமான மழை பெய்ததால், ஆறுகளில் நீர்வரத்து சற்று அதிரித்தது. ஏராளமான குளங்கள் நிரம்பின.
மேலும், கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. ஆறுகளில் வெள்ளம் அதிகரித்ததால், பெருஞ்சாணி அணையிலிருந்து தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
நாகர்கோவிலுக்கு குடிநீர்: நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வெப்பத்தின் தாக்கம் காரணமாக சரிந்ததையடுத்து, பேச்சிப்பாறை அணையிலிருந்து நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 65 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...