கடன் பிரச்னை: குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
By DIN | Published On : 15th May 2019 06:45 AM | Last Updated : 15th May 2019 06:45 AM | அ+அ அ- |

கடன் பிரச்னை காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறைபிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவர் மீன்பிடி தொழில் செய்ய முன்பணமாக, நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த டைட்டஸ் என்பவரிடம் ரூ. 1 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
வாங்கிய பணத்தை செல்வம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியதால், கன்னியாகுமரி பங்குப் பேரவையில் டைட்டஸ் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை செல்வம் உள்ளிட்ட 12 மீனவர்கள், கன்னியாகுமரியில் இருந்து நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டு திரும்பினர். அப்போது, டைட்டஸ் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயுதங்களுடன் சென்று சுற்றிவளைத்து, 12 மீனவர்களையும் 2 படகுகளையும் சிறைபிடித்து இடிந்தகரைக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் கன்னியாகுமரி மீனவர்கள் புகார் அளித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 44 மீனவ கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால், குமரி கடலோரக் கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்க்கும் நடவடிக்கையில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.