ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரையும்விடுவிக்க பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய த
Updated on
2 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்குரிமை இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும்போது எந்தவித தவறும் இல்லாமல் புதுப்பிக்க வேண்டும். வாக்காளர்களை சேர்க்கும்போது ஏற்பட்ட தவறுகளால் குமரி மாவட்டத்தில் மட்டும் 45 ஆயிரம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக போராடிய இயக்கம். இந்தியாவில் அந்த இயக்கம் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இலங்கையில் போர் முடிந்து விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது என இலங்கை அரசு அறிவித்த பின்னரும், இந்தியாவில் அந்த இயக்கத்துக்கு தடை நீடிப்பது ஏன் என்பது புரியவில்லை. இது அப்பட்டமான ஜனநாயக விரோதம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான போக்காகும். 
இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை உலகத்தில் உள்ள பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இலங்கை இனப்படுகொலைக்காக சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் என்ற தீர்மானம் மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டபோதும் இந்திய அரசு தடையாக இருந்தது. கடந்த மன்மோகன் அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக என்ன நிலைப்பாட்டை எடுத்ததோ அதையே தொடர்ந்து பாஜக அரசும் செய்கிறது. இந்திய அரசுகள் ஈழத்தமிழர்களின் பிரச்னையில் சிறிதளவுகூட அக்கறை காட்டவில்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, தடா சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்காகும். இவ்வழக்கை தடா நீதிமன்றம் ரகசியமாக விசாரித்தது. இவ்வழக்கில் 26 பேருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது, உலக நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாகும். இந்த தண்டனையை எதிர்த்து எனது தலைமையில் மக்களிடம் நிதி திரட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தடா சட்டத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டதே தவறு என்பதை வலியுறுத்தி 26 பேரில் 19 பேர் மீது குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்தது. இந்நிலையில் எஞ்சிய 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என அதிமுக அரசு 2018இல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் கடந்த 9 மாதகாலமாக ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக காரணம் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேருக்கும் இருந்த தடையை நீக்கிவிட்டது. எனவே, தமிழக அரசு உடனடியாக 7 பேரையும் விடுவிக்க வேண்டும். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com