நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கேரள மாநிலத்துக்கு கடத்த வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை வட்டாட்சியர் அப்துல்லா மன்னானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் தலைமையில், தனித் துணை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன்ராஜிகுமார் மற்றும் டேவிட் ஆகியோர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, கேரளத்துக்கு ரயிலில் கடத்திச் செல்ல ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கோணம் அரசு கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.