ராஜீவ் காந்தி நினைவு ஜோதி குமரி வருகை
By DIN | Published On : 19th May 2019 04:32 AM | Last Updated : 19th May 2019 04:32 AM | அ+அ அ- |

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் சனிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தது.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் பெங்களூருவில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் நினைவு ஜோதி பயணம் செல்வது வழக்கம். நிகழாண்டு, இப்பயணம் கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ். பிரகாசம் தலைமையில், கடந்த 15 ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. மைசூர், சத்தியமங்கலம், கோயம்புத்தூர், திருச்சூர், கொச்சின், திருவனந்தபுரம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு கன்னியாகுமரி வந்தது.
இந்நிலையில், இப்பயணம் கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் அருகே இருந்து சனிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்வுக்கு அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.பி. ராஜஜெகன் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் ஓபிசி பிரிவு செயலர் ஸ்ரீநிவாசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜூ சாமுவேல், மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை, மாவட்ட நிர்வாகிகள் டி. தாமஸ், பி. கிருஷணபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் பயணத்தைத் தொடங்கி வைத்தார். இந்தப் பயணம் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, மகாபலிபுரம், சென்னை வழியாக 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நிறைவடைகிறது. நிறைவு விழா நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.