கருங்கல் சந்தையில் காய்கனிகள் விலை உயர்வு
By DIN | Published On : 19th May 2019 04:29 AM | Last Updated : 19th May 2019 04:29 AM | அ+அ அ- |

திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் மே மாதம் அதிகமாக உள்ளதால், கருங்கல் தினசரி சந்தையில் காய், கனிகளின் விலை உயர்ந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய தினசரி சந்தைகளில் ஒன்று கருங்கல் சந்தை. இங்கு அனைத்து காய், கனிகளும் குறைந்த விலையில் கிடைப்பதால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றுக்கு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் கேரளத்தில் இருந்தும் மக்கள் இங்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த 15 நாள்களுக்கு முன்பு இருந்த விலையைவிட, சனிக்கிழமை கருங்கல் சந்தையில் நாட்டு மிளகு கிலோ 50 ரூபாயிலிருந்து ரூ. 250 ஆகவும், கத்தரிக்காய் ரூ. 30-லிருந்து ரூ. 70 ஆகவும், வழுதனங்காய் ரூ. 30- லிருந்து ரூ. 40 ஆகவும், புடலங்காய் ரூ. 25-லிருந்து ரூ. 30 ஆகவும், சேனைக்கிழங்கு ரூ. 30-லிருந்து ரூ. 40 ஆகவும், கேரட் ரூ. 40 -லிருந்கு ரூ. 70 ஆகவும் விலை உயர்ந்துள்ளன.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், பாலூர், புதுக்கடை, பள்ளியாடி, நட்டாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கரையோர மக்களும், கடலோர கிராமங்களான ஆலஞ்சி, குறும்பனை, மேல்மிடாலம், மிடாலம், இனயம், இனயம்புத்தன்துறை, முள்ளூர்துறை, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதி மக்களும் வழக்கத்தைவிட அதிகம் பொருள்கள் வாங்குகின்றனர். இதனால், சந்தையில் நெரிசல் அதிகமாக உள்ளது.
மே மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், பொதுமக்கள் வசதிக்காக திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன. இதனால், காய், கனிகள் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளதாக இங்குள்ள வியாபாரி வென்னிஸ் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...