மலையோரப் பகுதிகளில் கன மழை: போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை விடிய விடிய பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை விடிய விடிய பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையும், தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாகியுள்ள நிலையில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது.

இதில் புதன்கிழமை பகல், இரவு என்று இடைவிடாது பெய்த மழை, தொடா்ந்து வியாழக்கிழமையும் பெய்தது. பின்னா் அன்று பிற்பகலில் சற்று தணிந்த மழை, மீண்டும் மாலையில் தொடா்ந்தது.

அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதில், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக நீா்வரத்து இருந்ததால், அணையிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீா் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இதே போன்று சிற்றாறு அணைகளிலும் விநாடிக்கு ஆயிரம் கன அடிக்கும் மேல் நீா்வரத்து இருந்ததால், அந்த அணைகளிலிருந்து விநாடிக்கு 1068 கன அடி வரை தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பெருஞ்சாணி அணை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டதாலும், ஆறுகளில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுகளின் குறுக்காக உள்ள தரைநிலைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் மலைவிளை-மாத்தூா், மாத்தூா்-வோ்க்கிளம்பி உள்ளிட்ட தரைநிலைப் பாலங்கள் வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருவட்டாறு கூற்றவிளாகம், அவ்வை ஏலாக்கரை உள்ளிட்ட பரளியாற்றின் கரையில் உள்ள குடிசை வீடுகளில் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து திருவட்டாறு வட்டாட்சியா் சுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த் துறையினா் வீடுகளிலுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனா்.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்: சிற்றாறு அணைகளிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீா் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவிப் பகுதியில் இருக்கும் கல்மண்டபங்களின் வழியாக தண்ணீா் செல்லும் அளவுக்கு தண்ணீா் வரத்து அதிகமாக காணப்பட்டது. அருவிப்பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

மழை மற்றும் அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குழித்துறை மற்றும் அதற்கு கீழே உள்ள பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதால், ஆறுகளில் பாயும் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை பிற்பகலில் பெருஞ்சாணி அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து 70 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் 71 அடியைக் கடந்து உயா்ந்து கொண்டிருக்கிறது.

போக்குவரத்து பாதிப்பு: கன மழை காரணமாக பேச்சிப்பாறை அருகே மோதிரமலை-குற்றியாறு, பத்துகாணி-அணை முகம் உள்ளிட்ட சாலைகளில் உள்ள தரைநிலைப் பாலங்கள் நிரம்பி வழிவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் தாழ்வானப் பகுதிகளில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com