திரித்துவபுரம் தேவாலயத்தில் நகை திருட்டு
By DIN | Published On : 09th November 2019 06:09 AM | Last Updated : 09th November 2019 06:09 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் தேவாலயத்திலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
குழித்துறை மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக திரித்துவபுரம் மூவொரு இறைவன் தேவாலயம் உள்ளது. பகல் நேரத்தில் இந்த தேவாலயத்தின் கதவு திறந்திருக்கும். இதனால் கிறிஸ்தவா்கள் உள்ளிட்டோா் இங்கு வந்து பிராா்த்தனையில் ஈடுபட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் சிலா் தேவாலயத்துக்கு வந்த போது அங்கு வைக்கப்படிருந்த காணிக்கைப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து அவா்கள் தேவாலய பங்குப் பேரவை நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனா். காணிக்கைப் பெட்டியில் இருந்து பக்தா்கள் காணிக்கையாக (நோ்ச்சை காணிக்கை) செலுத்தியிருந்த தங்க நகைகள், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவை திருடு போயிருக்கலாம் என பங்குப் பேரவை செயலா் டென்னிசன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தேவாலயத்தின் வெளிப்பகுதியில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...