பேச்சிப்பாறை பண்ணையில் 20 ஆயிரம் அன்னாசிப் பழச் செடிகள் நடவு
By DIN | Published On : 01st September 2019 04:49 AM | Last Updated : 01st September 2019 04:49 AM | அ+அ அ- |

பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை பண்ணையில் 20 ஆயிரம் அன்னாசிப் பழச் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
பேச்சிப்பாறை சீரோ பாயின்டில் அரசு தோட்டக் கலை பண்ணை 15 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
இப்பண்ணையில் தோட்டக்கலை பயிர்களான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பயிர்கள், மலைப் பயிர்களின் செடிகள் உருவாக்கப்பட்டு அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்பண்ணையில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவங்கப்பட்டை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் இடையே ஊடுபயிராக அன்னாசிப் பழ செடிகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஒரு ஹெக்டேர் பரப்பில் 20 ஆயிரம் அன்னாசிப் பழச் செடிகள் நடப்படுகின்றன. இப்பணியை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அசோக் மேக்ரின் தொடங்கி வைத்தார்.
இதில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் (நடவு பொருள்) விமலா, மேல்புறம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சரண்யா, தோட்டக் கலை அலுவலர் நந்தினி, உதவி தோட்டக் கலை அலுவலர் சுபாஷ், முன்னோடி அன்னாசி விவசாயி பி. ஹென்றி ஆகியோர் பங்கேற்றனர்.
இது குறித்து, உதவி இயக்குநர் கூறியது; பேச்சிப்பாறை அரசு தோட்டக் கலை பண்ணையில் தோட்டக் கலை பயிர்கள் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை நடைபெற்று வருகின்றன. தற்போது இங்கு இலவங்கப்பட்டை மரங்களுக்கிடையே அன்னாசிபழ செடிகளை ஊடுபயிராக நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தோட்டக் கலை பண்ணைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார் அவர்.