குளச்சல் அருகே பள்ளிச் சிறுமி மீது தாக்குதல்: டியூஷன் ஆசிரியை மீது வழக்கு
By DIN | Published On : 22nd September 2019 03:55 AM | Last Updated : 22nd September 2019 03:55 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்குமாறு தெரிவித்து.
பள்ளிச் சிறுமியை தாக்கியதாக டியூஷன் ஆசிரியை மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், முகநூல், கட் செவி அஞ்சல் போன்ற சமூக வலை தளங்களில் 5 வயது மதிக்கக் கூடிய பள்ளிச்சிறுமியின் முதுகில் பிரம்பால் அடித்ததில் ஏற்பட்ட ரத்தக் காயம், கை விரல் கிழிந்த நிலையில் காணப்படும் படங்கள் வெளியானது. இந்த பதிவில் காணப்படும் அச்சிறுமி பெத்தேல்புரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமி கடும் உடல்வலியால் தேர்வெழுத முடியாமல் தவித்தாராம்.
அச்சிறுமியிடம் பள்ளி ஆசிரியர்கள் விசாரித்ததில், சிறுமியின் தாயாரின் தோழி டியூஷன் சென்டர் நடத்தி வருவதும், அங்குபடிக்கச் செல்லும் தன்னை டியூஷன் ஆசிரியை தாக்கியது குறித்தும் தெரிவித்தாராம்.
இது குறித்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குமுதா, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சிறுமி பயின்று வரும் பள்ளி ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வரும் அச்சிறுமியை டியூஷன் ஆசிரியை கடுமையாக அடித்ததில் வெள்ளிக்கிழமை தேர்வு எழுதியபோது அந்த மாணவி மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.
அதிக மதிப்பெண் எடுக்குமாறு அகப்பை, கம்பு ஆகியவற்றால் அச்சிறுமியை டியூசன் ஆசிரியை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, டியூஷன் ஆசிரியை ஜெசிமோள் (40) என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...