பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் 3 ஆவது நாளாக போராட்டம்
By DIN | Published On : 29th September 2019 12:53 AM | Last Updated : 29th September 2019 12:53 AM | அ+அ அ- |

தாமதம் இன்றி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் நாகர்கோவிலில் 3 ஆவது நாளாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு 8 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கவில்லை.
இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தாமதமின்றி மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வேலை நேரம் குறைப்பு நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 3 ஆவது நாளாக சனிக்கிழமை ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார்.
அகில இந்திய துணை பொதுச்செயலர் சி.பழனிச்சாமி, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்டச்
செயலர் பி.ராஜு, மாவட்டத் தலைவர் ஜார்ஜ், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் செல்வம், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் மீனாட்சி சுந்தரம், நிர்வாகிகள் ஆறுமுகம், சின்னத்துரை, தனபால், மகேஷ், அனில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.