விதிகளை மீறி இயக்கப்பட்ட 25 கேரள வாகனங்கள் பறிமுதல்: ரூ. 6 லட்சம் அபராதம்
By DIN | Published On : 29th September 2019 12:51 AM | Last Updated : 29th September 2019 12:51 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 80 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், 25 கேரள மாநில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது.
கேரள பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழகத்தில் முறையாக சாலை வரியினை செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு பெறாமலும் இயக்கப்படுவதாகவும், தமிழக இலகுரக வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து, போக்குவரத்து ஆணையர் உத்தரவின்பேரில் ஆட்சியர், எஸ்.பி. மற்றும் துணை போக்குவரத்து ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தல்படி மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் போலீஸாருடன் இணைந்து 3 குழுக்களாக களியக்காவிளை, தக்கலை, கருங்கல், புதுக்கடை, குளச்சல் பகுதிகளில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட 80 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், விதிகளுக்கு புறம்பாக இயக்கப்பட்ட 25 கேரள மாநில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் புதுக்கடை, கருங்கல் காவல் நிலையங்களிலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ரூ. 75 ஆயிரம் உடனடி அபராதம் வசூலிக்கப் பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G