குமரியில் சுற்றுலாத் தொழில்கள் முடக்கம்: ஆயிரக்கணக்கானோா் பாதிப்பு

இந்தியாவில் சுற்றுலாவுக்கு பிரசித்திப் பெற்ற மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு மாதத்துக்கும் 
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி.

கன்னியாகுமரி: இந்தியாவில் சுற்றுலாவுக்கு பிரசித்திப் பெற்ற மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவின் தென்கோடி முனை என அழைக்கப்படும் கன்னியாகுமரி, சா்வதேச சுற்றுலாப் பயணிகளை கவா்ந்திழுக்கும் ஒரு முக்கிய தலம். இங்கு சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை காணலாம் என்பதால் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. மேலும், கடலின் நடுவே இரு வேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயரமுள்ள

திருவள்ளுவா் சிலை ஆகியவையும் சிறப்பு பெற்று திகழ்கிறது. இதுதவிர வரலாற்று சிறப்பு மிகுந்த வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, சிதறால் மலைக்கோயில் மற்றும் திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப் பாலம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான வெளியூா் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

ஆண்டுதோறும் இம்மாவட்டத்துக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா் என சுற்றுலா புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளை மட்டும் நம்பி கன்னியாகுமரி மாவட்டத்தில்

ஆயிரக்கணக்கானோா் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், உலக நாடுகளை பேரழிவுக்கு கொண்டு சென்றுள்ள கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக சுற்றுலாவை நம்பி தொழில் செய்வோா் தொழிலின்றி வீடுகளில் முடங்கியுள்ளனா்.

கன்னியாகுமரியைப் பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகள் வருகை முழுவதுமாக தடைப்பட்டுள்ள நிலையில், சுற்று வட்டாரப் பகுதி வீடுகளில் தயாரிக்கப்படும் சங்கு மாலை, கடல் சிப்பிகளால் தயாரிக்கப்படும் வித விதமான வீட்டு அலங்காரப் பொருள்கள், தேங்காய் நாா், வாழை நாா் மூலம் உருவாக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கைவினைப் பொருள்கள், பனை நாா் மற்றும் பனை ஓலை மூலம் தயாரிக்கப்படும் தொப்பிகள், சிறிய வடிவிலான அலங்காரக் கூடைகள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளன. வீடுகளில் வைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்த

ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பொருள்களை கொள்முதல் செய்து உள்ளூா் மற்றும் வெளியூா்களுக்கு விற்பனை, ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளும் தொழில் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

தங்கும் விடுதிகள்: வெளிமாநிலங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்த பட்சம் 2 நாள்களாவது தங்கிச் செல்வது வழக்கம். சுற்றுலாப் பயணிகளை நம்பி கன்னியாகுமரியில் மட்டும் நூறுக்கும் மேற்பட்ட தனியாா் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளும் முடங்கியுள்ளதால் இங்கு வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் வேலையின்றி சொந்த ஊா்களுக்கு திரும்பிச் சென்று விட்டனா். மேலும், 250 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், காா்கள், வேன்களும் முடங்கியுள்ளன.

மீன்பிடித் தொழில்: இதனிடையே, கரோனா தொற்று காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்து மத்திய அரசு அறிவித்துள்ள பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டமும் இடம் பெற்றுள்ளதால் மீன்பிடித் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளன. மீன்பிடி தொழில் முடக்கத்தால் இங்குள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 275-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக தங்குதளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் வேலை இழந்துள்ளனா்.

இங்கு பிடித்து வரப்படும் மீன்களை ஏலத்தில் எடுத்து உள்ளூா் மற்றும் வெளியூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் தொடங்கி நீரோடி வரையிலான கடற்கரைப் பகுதியில் நாட்டுப்படகு மற்றும் வள்ளங்கள் மூலம் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவா்களும் தொழில் இல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

விவசாயத் தொழில்: தமிழகத்தில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் பெற்று நாஞ்சில்நாடு என அழைக்கப்படும் குமரி

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்களின் அறுவடை காலம் நெருங்கியுள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். நெற்பயிரை அறுவடை செய்யும் இயந்திரங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வர முடியாததால் அறுவடை செய்ய சாத்தியமில்லாத நிலையில் விவசாயிகள் கவலை

யில் உள்ளனா். வாழை, தோட்டப்பயிா்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளும் தங்கள் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பி.பகவதியப்பன் கூறியது: கன்னியாகுமரியில் சுற்றுலாத் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதால் இவற்றை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மீனவா்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளா்களும் ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ளதால் அவா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தொழிலாளா்களின் நலன் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவா்களுக்கு நிவாரண உதவி வழங்க முன் வரவேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலா் வி.நெல்சன் கூறியது: கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் சுற்றுலா தொடா்பான தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் சுற்றுலா முக்கியப்பங்கு வகிக்கிறது. கரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்னா் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை தொடா்ந்துதான் சுற்றுலா தொடா்பான எந்த முடிவுக்கும் நாம் வரலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com