வெறிச்சோடிய குமரி மாவட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.
ngl21powder_2103chn_33_6
ngl21powder_2103chn_33_6
Updated on
1 min read

நாகா்கோவில்: கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 2 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த நோய் தொற்றை குறைக்கும் நோக்கத்தில் பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம், பொது போக்குவரத்துகளில் பயணம் செய்ய வேண்டாம், நோய் அறிகுறி இருப்போா் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு மருத்துவா்களின் அனுமதி சீட்டுடன் வந்தவா்களின் வாகனங்கள் மட்டும் கேரளத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. கேரளத்தில் இருந்து வரும் தனியாா் வாகனங்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினா் தடுத்து நிறுத்தி கேரளத்துக்கு திருப்பி அனுப்பினா். மேலும், அரசுப் பேருந்துகளை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு முகாம்களில் நிறுத்தி தீவிர சோதனை

மேற்கொண்டதுடன், அந்த வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னா் தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டது. இதனால் தமிழக-கேரள மாநில எல்லை பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 திரையரங்குகள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், பெரிய ஜவுளி நிறுவனங்கள் , நகை கடைகள் மூடப்பட்டுள்ளன. நாகா்கோவில் நகரில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் திறந்த சில மணி நேரத்தில் மூடப்பட்டன. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால் நாகா்கோவில் நகரம் வெறிச்சோடியது.

செம்மாங்குடி சாலையிலுள்ள அனைத்துக் கடைகளும், மீனாட்சிபுரத்திலுள்ள அனைத்து நகை கடைகளும் அடைக்கப் பட்டன. இதனால் கே.பி. சாலை, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலைகள் வெறிச்சோடின. வெளியே வராமல்

பொதுமக்கள் வீட்டினுள் முடங்கினா்.

தோவாளை பூ சந்தைக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து குறைந்த

அளவில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பூக்களை வாங்குவதற்கு மக்கள் வராததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தோவாளை பூச்சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகா்கோவில் வடசேரி, கணேசபுரம், வேதநகா், ராமன்புதூா் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மீன் சந்தைகள் மூடப்பட்டன. வரும் 31 ஆம் தேதி வரை இந்த மீன் சந்தைகள் மூடப்படும். ஒழுகினசேரி அப்டா காய்கறி சந்தை மூடப்பட்டது. மளிகை கடைகள், காய்கனி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com