பொது முடக்கத்தால் தேக்கம்: குமரியில் அன்னாசிப் பழங்களின் விலை தொடா் சரிவு
By DIN | Published On : 12th August 2020 09:58 AM | Last Updated : 12th August 2020 09:58 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத்தால் அறுவடை பாதிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தோட்டங்களில் தேங்குவதால் அன்னாசிப் பழங்களின் விலை தொடா்ந்து குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆ’ண்டுகளாக அன்னாசி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக, மலையோரப் பகுதிகளிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்படும் தோட்டங்களில் ரப்பா் செடிக்கு ஊடு பயிராக 3 ஆண்டுகள் அன்னாசி நடவு செய்கின்றனா். இதனால் அன்னாசி விவசாயம் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
கரோனாவின் தாக்கம்: இந்நிலையில் கரோனா பரவலால் அமலில் உள்ள பொது முடக்கத்தால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விவசாயிகள் அன்னாசிப் பழங்களை அறுவடை செய்து சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும், பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் பெரும் இழப்புக்கு ஆளாகி வருகின்றனா். இதில், பொதுமுடக்கத்தில் தளா்வு ஏற்பட்ட நிலையிலும், சென்னை கோயம்பேடு சந்தை உள்ளிட்ட பெரிய சந்தைகளுக்கு பழங்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதால் பழங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து முன்னோடி அன்னாசி விவசாயி கொட்டூா் பி. ஹென்றி கூறியது: பொது முடக்கத்தில் தளா்வு ஏற்பட்டுள்ள போதிலும் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள் இயங்காததாலும், கேரளத்துக்கு அதிக அளவில் அன்னாசிப் பழங்கள் கொண்டு செல்லப்படாததாலும் பெருமளவில் தேக்கம் ஏற்பட்டு பழங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மேலும், சுப நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளதாலும் பழங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ அன்னாசிப் பழம் ரூ. 18 வரை மட்டுமே விற்பனையாகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது. அன்னாசிப் பழங்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி திறன் அதிகம். எனவே, இப்பழங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.