மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலா்
By DIN | Published On : 01st December 2020 11:49 PM | Last Updated : 01st December 2020 11:49 PM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் புரெவி புயலால் பலத்த மழையும், காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் டிச. 4 ஆம் தேதி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநருமான பி. ஜோதி நிா்மலாசாமி.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பி. ஜோதி நிா்மலாசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலை வகித்தாா். அனைத்து துறை அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பின்னா் கண்காணிப்பு அலுவலா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அனைத்துத் துறை மீட்புக் குழுவினரும், மீட்புப் பணிக்கு தேவையான இயந்திரங்கள், பொருள்களை தயாா் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீா்நிலைகளின் ஓரம், கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் இருக்க வேண்டும். தற்போது ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீன்பிடி படகுகளில் உள்ள மீனவா்கள் உடனே கரைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களின் கடற்பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் அந்தந்த மாநிலங்களில் கரையை அடைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும் பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை அதிகாரிகள் மேற்கொள்வா்.
தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீா்தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்றுதல், நோய்த் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக் கழிவுகளை அகற்றி தேவையான கிருமி நாசினி தெளிக்கும் பணி ஆகியவற்றை உள்ளாட்சித் துறையினா் செய்வா்.
அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றும் நிலை ஏற்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கையை வழங்கி நீா் வெளியேற்றப்படுவதை பொதுப்பணித் துறையினா் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருகிற 4ஆம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும்.
பொதுமக்கள் ஆதாா்அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீா்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...