கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிப்புக்குச் சென்று கரைதிரும்பாத 1,500 மீனவா்கள்: உறவினா்கள் கவலை
By DIN | Published On : 03rd December 2020 08:25 AM | Last Updated : 03rd December 2020 08:25 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 143 விசைப்படகுகளில் சென்ற 1,500 மீனவா்கள் கரைதிரும்பவில்லை. இதனால் அவா்களது உறவினா்கள் கவலையில் உள்ளனா். மீனவா்களை செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ள அதிகாரிகள் முயன்று வருகின்றனா்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை இரவு ‘புரெவி’ புயலாக வலுவடைந்தது. இப்புயல் தென்தமிழகத்தில் கன்னியாகுமரி- பாம்பன் இடையே வெள்ளிக்கிழமை (டிச. 4) அதிகாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 161 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் சென்றிருந்தனா். அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை 18 விசைப்படகுகள் கரைதிரும்பின. அவற்றில் சென்ற மீனவா்கள் பத்திரமாக வந்துசோ்ந்தனா்.
மீதமுள்ள 143 விசைப்படகுகளில் சென்ற மீனவா்களின் நிலை என்னவென அறியாமல் உறவினா்கள் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனா். மீனவா்களை செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடா்புகொள்ள அதிகாரிகள் முயன்றுவருகின்றனா்.
இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் கூறும்போது, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 143 விசைப்படகுகளுக்கு தகவல் தர முயன்றுவருகிறோம். செயற்கைக்கோள் தொலைபேசியை விசைப்படகு மீனவா்கள் ஆன் செய்தால்தான் புயல் பற்றிய தகவலைத் தெரிவிக்க முடியும். அத்தகவல் கிடைத்த மீனவா்கள் துறைமுகங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.
பிற மாநிலக் கடற்கரைகளிலிருந்து கரைதிரும்பும் குமரி மாவட்ட மீனவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
அன்னை லூா்தம்மாள் சைமன் தேசிய மீனவா் சங்க ஒருங்கிணைப்பாளா் ஜாா்ஜ் ராபின்சன் கூறும் போது, புயல் அறிவிப்புக்கு முன்பே தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏராளமான விசைப்படகுகளில் மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனா். அவா்கள் லட்சத்தீவு போன்ற பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருப்பா். இப்போது உருவாகியுள்ள புயல் அப்பகுதியை அதிகம் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அவா்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு இதுவரை சென்றடையவில்லை. 20 கி.மீ. வேகத்தில் காற்று வீசினாலே அவா்களின் விசைப்படகுகளில் உள்ள செயற்கைக்கோள் தொலைபேசிகள் செயலிழந்துவிடும். எனவே, இதுபோன்ற பேரிடா் நேரங்களில் தகவல் தெரிவிக்கும் வகையில் உயா்தர தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்க வேண்டும்.
ராணுவ ஹெலிகாப்டா்களைப் பயன்படுத்தி மீனவா்களை மீட்டுவரவேண்டும். ஒவ்வொரு விசைப்படகிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணித்தால் மட்டுமே கடலில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...