கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் சின்னம் காரணமாக கன மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், அனைத்து அணைகளும் புதன்கிழமை மூடப்பட்டன.
புரெவி புயல் காரணமாக இம்மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கனமழையால் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களும், மக்களும் பாதிக்கப்படாத வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
புதன்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 43.95 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 69.70 அடியாகவும், சிற்றாறு அணைகள் நீா்மட்டம் முறையே 13.87, 13.97 அடியாகவும் இருந்தன. இதில், பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்த நிலையில் உள்ளன. கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் தரப்பில் கூறியது: கனமழை காரணமாக கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அணைகள் மூடப்பட்டு, கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அணைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளதால் அணையின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீா் தேக்க முடியும். எனவே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அதேநேரம், ஆற்றங்கரையோரம் வசிப்போா் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.