பாஜக பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் ஒருவருக்கு 6 ஆண்டு சிறை
By DIN | Published On : 15th December 2020 02:31 AM | Last Updated : 15th December 2020 02:31 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் பாஜக பிரமுகரை கொலை செய்ய முயன்ற வழக்கில், ஒருவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
நாகா்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சிவிளையை சோ்ந்தவா் முத்துராமன் (53). இவா், குமரி மாவட்ட பாஜக பொருளாளராக உள்ளாா். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். இவரது அலுவலகம் நாகா்கோவிலில் உள்ளது. கடந்த 2015, ஜனவரி 2-ஆம் தேதி காலை வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தாா். லாலாவிளை பகுதியில் செல்லும்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் முத்துராமனை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இதில் முத்துராமன் பலத்த காயமடைந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக, கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த மாஹீன்(36), தாஹிா்(35), தா்வேஷ் மீரான் (34), அஷ்ரப் அலி(34), வெள்ளாடிச்சிவிளையைச் சோ்ந்த தாஷிமா (35), இடலாக்குடி தவ்பீக் (35), திருவிதாங்கோடு நசீா் (39) ஆகிய 7 போ் மீது கோட்டாறு போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னா் வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கும், அதன்பிறகு நெல்லை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கும் மாற்றப்பட்டது.
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மாஹீனுக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.10,500 அபராதம் விதித்து நீதிபதி ராமலிங்கம் தீா்ப்பு கூறினாா். இவ்வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட மற்ற 6 பேருக்கும் இவ்வழக்கில் தொடா்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால் அவா்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.