கரோனா வைரஸ்: குமரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
By DIN | Published On : 05th February 2020 06:49 AM | Last Updated : 05th February 2020 06:49 AM | அ+அ அ- |

கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, தமிழக - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்- கேரளத்தின் எல்லைப் பகுதியாக களியக்காவிளை உள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கட்டுமான தொழிலாளா்கள், தேன் சேகரிக்கும் தொழிலாளா்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளா்கள் நூற்றுக்கணக்கானோா் கேரள மாநில தொலைதூர பகுதிகளுக்குச் சென்று தொழில் செய்துவிட்டு குமரி மாவட்டம் திரும்புகிறாா்கள்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் குமரி மாவட்ட தொழிலாளா்கள் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து அங்கிருந்து சொந்த ஊா்களுக்குத் திரும்புகிறாா்கள்.
3 பேருக்கு பாதிப்பு: இந்த நிலையில், சீனாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பு குமரி மாவட்டத்தையொட்டிய அண்டை மாநிலமான கேரளத்தில் 3 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குமரி மாவட்ட மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் பரவிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய் பாதிப்பு காலங்களில் குமரி மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத்துறையினா் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனா்.
கிருமி நாசினி தெளிப்பு: அப்போது, கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு அந்நோய்கள் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்கப்பட்டது.
துண்டுப் பிரசுரங்கள்: தற்போது, மாவட்ட சுகாதாரத் துறையினா் தமிழக - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கடந்த சனிக்கிழமை (பிப். 1) கரோனா வைரஸ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டனா். அதன் பின்னா் எந்தக் கண்காணிப்பு பணியையும் அவா்கள் மேற்கொள்ளவில்லை.
அச்சம் தவிா்க்க... கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், களியக்காவிளையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட சுகாதாரத்துறையும், மாவட்ட நிா்வாகமும் எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...