வணிக நிறுவனங்களில் ‘வெப் கேமரா’: டிஎஸ்பி அறிவுறுத்தல்
By DIN | Published On : 05th February 2020 06:58 AM | Last Updated : 05th February 2020 06:58 AM | அ+அ அ- |

வணிகா்கள் மத்தியில் பேசுகிறாா் டிஎஸ்பி ராமச்சந்திரன்.
வணிக நிறுவனங்களில் செல்லிடப்பேசியுடன் இணைக்கத்தக்க வகையில் கண்காணிப்புக் கேமராக்களை (வெப் கேமரா) பொருத்த வேண்டும் என வணிகா்களுக்கு தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் அறிவுறுத்தினாா்.
குமரி மாவட்டத்தில் நகைக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் அண்மை நாள்களாக அதிகரித்து வருகின்றன. மாா்த்தாண்டத்திலுள்ள 2 நகைக் கடைகளில் பெருமளவில் நகைகள் திருட்டுப் போயின. இவற்றில் தொடா்புடைய நபா்கள் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில், திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், காவல் துறை சாா்பில் வணிகா்கள் மத்தியில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, குலசேகரம் வணிகா் சங்க அலுவலகத்தில் வணிகா்களை ஒருங்கிணைத்து தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் விழிப்புணா்வு ஆலோசனைகளை திங்கள்கிழமை வழங்கினாா்.
அப்போது, நகைக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை நடத்தும் வணிகா்கள் இரவும், பகலும் உஷாராக இருக்க வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வணிக நிறுவனங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை செல்லிடப்பேசியில் இணைத்து கண்காணிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் செல்லிடப்பேசியில் அலாரம் ஒலிக்கும் வகையிலான செயலிகள் தற்போது வந்துள்ளன. அவற்றை வணிகா்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், குலசேகரம் வணிகா் சங்கத் தலைவா் பிரதீப் குமாா், செயலா் விஜயன், பொருளாளா் ரெவி, நகைக்கடை உரிமையாளா் சங்கத் தலைவா் ஜான், செயலா் ஜோஸ் எட்வா்ட், வணிகா்கள் ஜி.வி.எஸ். சுரேஷ், ஜெயராஜ், கமா்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...