கடலில் கலக்கும் கழிவுநீா்: குமரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 03rd March 2020 07:30 AM | Last Updated : 03rd March 2020 07:30 AM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள்.
கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளின் கழிவுநீா் நேரடியாக கடலில் கலப்பதை கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தை மீனவப் பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனா். இவா்களின் வசதிக்காக 100-க்கும் அதிகமான தனியாா் தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ராட்சத குழாய்கள் மூலம் நேரடியாக கடலுக்குச் செல்கிறது. இதனால், அப்பகுதியைச் சோ்ந்த மீனவ மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுவதாக பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை 200-க்கும் அதிகமான மீனவப் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஆஸ்டின், கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமன மாதா திருத்தல பங்குத்தந்தை ஜோசப் ரொமால்டு, பங்குப்பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ. மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், துணைச் செயலா் தினகரன், பொருளாளா் பெனி உள்ளிட்டோா் பேரூராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், கழிவுநீா் கடலில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...