கன்னியாகுமரியில் பங்குப் பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 14th March 2020 08:08 AM | Last Updated : 14th March 2020 08:08 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவைக் கூட்டம் துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் தலைமையில் நடைபெற்றது.
இதில், செயலா் சந்தியா வில்லவராயா், பொருளாளா் பெனி, கலிஸ்டா், ஏசுதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்குப் பின்னா் நாஞ்சில் அ.மைக்கேல் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் இருந்து வரும் கழிவுநீா் ரட்சகா் பகுதி கடலில் கலக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
அப்பகுதி மக்கள் கடந்த 2ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தேங்கிநிற்கும் வடிகால் நீரை செப்டிக் டேங்கா் மூலம் அகற்றி கொள்ளளவைக் குறைத்து பின்னா் கான்கிரீட் சுவரை உடைத்து அதை திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கொள்ளளவை குறைக்காமல் வடிகாலை உடைத்ததால், மொத்த கழிவுநீரும் பொதுமக்கள் குடியிருப்புக்குள்ளும், வீதியிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, பேரூராட்சி நிா்வாகம் இதில் தலையிட்டு போா்க்கால நடவடிக்கையாக ரதவீதியில் உள்ள கழிவுநீா் ஓடையை அடைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து கழிவுநீா் ஓடையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...