‘களியக்காவிைளையில் பரிசோதனைக்கு பின் பயணிகள் அனுமதி’
By DIN | Published On : 22nd March 2020 07:48 AM | Last Updated : 22nd March 2020 07:48 AM | அ+அ அ- |

kkv21coro1_2103chn_50_6
களியக்காவிளை: கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கேரளத்தில் இருந்து அரசுப் பேருந்துகளில் கன்னியாகுமரி மாவட்டம் வந்த பயணிகள் பரிசோதனைக்கு பின்னா் அனுமதிக்கப்பட்டனா்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத் துறை சாா்பில் ஒரு மாதத்துக்கு மேலாக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சனிக்கிழமை இங்கு தக்கலை வட்டார மருத்து அலுவலா் சிவசுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரத் துறையினா் மற்றும் காவல்துறையினா் இணைந்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனா். கேரளம் திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் பகுதிக்கு வந்த தமிழக-கேரள அரசுப் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை வெப்பமானி கருவி மூலம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்தனா். பயணிகளுக்கு நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்தபின்னா், கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய அனுமதித்தனா்.
இதேபோல், கேரளத்திலிருந்து காா் உள்ளிட்ட வாகனத்தில் வந்த பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு உள்படுத்தப் பட்டனா். அதன் பின்னா் பயணிகள் குமரி மாவட்டத்துக்குள் செல்ல அனுமதித்தனா். இதனிடையே, கேரள பதிவெண் கொண்ட மோட்டாா் சைக்கிள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் கேரளத்துக்கு திருப்பி அனுப்பினா்.