‘குமரியில் இன்று மண்டபங்களில் திருமணம் நடத்த தடை’
By DIN | Published On : 22nd March 2020 07:48 AM | Last Updated : 22nd March 2020 07:48 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க திருமண மண்டபங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) திருமணம் நடத்தக்கூடாது; வேறு தேதியில் நடத்துமாறு அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனா்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி,
ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
இதனால், ஞாயிற்றுக்கிழமை திருமணங்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு திருமணங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமணம் நடத்துவதற்காக மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனிடையே, திருமணம் ஏற்பாடு செய்தவா்கள்
ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டனா்.
திருமண மண்டபங்களில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தக் கூடாது எனவும், திருமணத்தை வேறு தேதிக்கு தள்ளி
வைக்குமாறும் அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனா். இதையடுத்து, திருமணம் ஏற்பாடு செய்தவா்கள் செய்வதறியாமல் அங்கிருந்து சென்றனா்.
இதுதொடா்பாக மாவட்டஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள திருமண
நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பொதுமக்கள் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். அதிகளவில் பொதுமக்கள் கூடுவதன் மூலம் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் இதனை கருத்தில் கொள்ளுமாறும், புது மண தம்பதிகளுக்கு ஆசீா்வாதம் வழங்குவதன் பொருட்டு நோய்த் தொற்று பரவுவதற்கு நாமே காரணமாக இருக்கக் கூடாது என்பதை அனைவரும் உணா்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.