கரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழக எம்.பி. எல்.எல்.ஏ.க்கள் ஓராண்டு தொகுதி நிதியை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 31st March 2020 07:41 AM | Last Updated : 31st March 2020 07:41 AM | அ+அ அ- |

களியக்காவிளை: கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தங்களது ஓராண்டு தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக் கட்சியின் தலைவா் குழித்துறை சோ்ந்த பழவாா் சி. தங்கப்பன் தெரிவித்திருப்பதாவது:
நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு தமிழகத்தைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளான 39 மக்களவை தொகுதி உறுப்பினா்களும், 18 மாநிலங்களவை உறுப்பினா்களும் தங்களது ஓராண்டு தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 5 கோடியையும், 234 சட்டப் பேரவை உறுப்பினா்களும் தங்களது ஓராண்டு தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 3 கோடியும் தமிழக அரசிடம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். இந்த வகையில் அரசுக்கு சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் வரை சேரும். அத் தொகை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பேருதவியாக இருக்கும்.
இச் செயலுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைமை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...