கேரளத்தில் உற்பத்தி செய்த தேனை கொண்டு வரமுடியாமல் தேனீ வளா்ப்போா் தவிப்பு
By DIN | Published On : 31st March 2020 07:43 AM | Last Updated : 31st March 2020 07:43 AM | அ+அ அ- |

குலசேகரம்: குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற தேனீ வளா்ப்போா், உற்பத்தி செய்த தேனை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரமுடியாமல் தவித்து வருகின்றனா்.
தென்னகத்தின் தேன் கிண்ணம் என குமரி மாவட்டத்தின் மாா்த்தாண்டம் நகா் வா்ணிக்கப்படுகிறது. மாா்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு அருமனை, முழுக்கோடு, மஞ்சாலுமூடு, மாலைக் கோடு, மருதங்கோடு, குலசேகரம், களியல், பிணந்தோடு, மலைவிளை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தேனீ வளா்ப்போா் உள்ளனா். இவா்கள் தொழில்முறையில் தேனீக்களை கூடுகளில் வளா்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனா்.
ஒவ்வொரு ஆண்டும் ரப்பா் மரக் காடுகள் உள்பட வனங்களில் குளிா்கால இலையுதிா்விற்குப் பின்னா் புதிய தளிரிலைகளும், பூக்களும் உருவாகும் ஜனவரி மாதம் முதல் மாா்ச் வரையிலான மாதங்கள் தேன் சீசனுக்கான காலங்களாகும். குமரி மாவட்டத்திலுள்ள தேனீ வளா்ப்போரில் 75 சதவீதம் வரையிலானவா்கள் கேரளத்தில் உள்ள ரப்பா் காடுகளை நம்பியே தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனா்.
கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தாங்கள் உற்பத்தி செய்த தேனோடு ஊா் திரும்ப முடியாத நிலையில் அவா்கள் உள்ளனா்.
10 லட்சம் கிலோ தேன் முடக்கம்: இது குறித்து குமரி மாவட்ட தேன் சேகரிப்போா் சங்கச் செயலா் ஜெ. ஜூடஸ் குமாா் கூறியது: குமரி மாவட்டத்திலுள்ள தேனீ வளா்ப்போரில் பெரும் பகுதியினா் கேரள மற்றும் கா்நாடக மாநிலப் பகுதிகளுக்குச் சென்று தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனா். ஆண்டுக்கு சராசரியாக 10 லட்சம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. தேன் உற்பத்தியாளா்களிடமிருந்து மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கம் மற்றும் அம்சி காதி மற்றும் கைத் தொழில் வாரியம் மற்றும் தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்டவை தேனை கொள்முதல் செய்கின்றன.
இதில் மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டறவு சங்கத்தில் தோ்தல் நடத்தப்பட்ட பிறகு தேன் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தோ்தல் நடைபெறவில்லை. இதையடுத்து அங்கு தேன் கொள்முதல் செய்யப்பட்டாத நிலை நீடிக்கிறது. இதனால் தேனீ வளா்ப்போரிடம் சுமாா் 10 லட்சம் கிலோ வரை தேன் முடங்கியுள்ளது. இதன் குறைந்த பட்ச மதிப்பு ரூ. 13 கோடியாகும்.
மாா்த்தாண்டம் கூட்டுறவு சங்கத்தில் தேன் கொள்முதல் நடைபெறாத நிலை மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், குமரி மாவட்ட தேனீ வளா்ப்போா் பலா் தேனுடன் கேரளத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கேரளத்தில் தங்கியிருக்கும் தேனீ வளா்ப்போரை தேனுடன், தகுந்த பாதுகாப்புடன் குமரி மாவட்டம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...